நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் இன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இரு காட்சிகள் ஓடி முடிந்துவிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் படம் திருப்தியாக உள்ளது என்றும், சிலர் எதிர்பார்த்த அளவுக்குப் படம் இல்லை என்றும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களை பீஸ்ட் படம் பெற்று வரும் நிலையில், இதிலும் யோகி பாபுவை உருவ கேலி செய்திருப்பது வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!
தமிழ் சினிமாவில் கவுண்டமணி காலத்தில் இருந்தே உருவ கேலி செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. சந்தானம் நடிகரான காலகட்டத்தில் அது உச்சம் பெற்று தற்போது வரை தொடர்கிறது. அதுவும் யோகி பாபுவைக் கலாய்ப்பதில் எல்லை மீறல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மான் கராத்தே, யாமிருக்க பயமே படங்களில் யோகி பாபுவை உருவ கேலி செய்தனர். பன்னி மூஞ்சி வாயன், குரங்குக் குட்டி, கரடி என்று விதவிதமாகக் கிண்டல் செய்தனர்.
நிறம், எடை, உருவம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு யாரையும் புண்படுத்தக் கூடாது, அது மனிதநேயமற்றது, அறமற்றது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும் திரையில் அந்த அவலம் நீடிக்கிறது. தவறான முன்னுதாரணமாகி விடக் கூடாது என்கிற பொறுப்புணர்வும், சமூக பிரக்ஞையும் படைப்பாளிகளுக்கு இருப்பதை அவர்கள் உணர மறுக்கிறார்களா என்று தெரியவில்லை. எந்த எல்லைக்கும் சென்று சக நடிகர்களை காமெடி என்கிற பெயரில் மட்டம் தட்டுகிறார்கள்.
டாக்டர் படத்தில் யோகி பாபுவைக் கலாய்ப்பதும், யோகி பாபு மற்றவர்களை உடல்ரீதியான ஒப்பீடுகளுடன் கிண்டல் செய்வதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் பீஸ்ட் படத்திலும் யோகி பாபு மீதான உருவ கேலி தொடர்ந்துள்ளது. படத்தில் மூதாட்டி ஒருவர் கரடிக்குட்டி, நாய்க்குட்டி என்றும், பெடிகிரி சாப்பிடுகிறாயா என்றும் கேவலமாகப் பேசித் திட்டியுள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எப்படி இதனை அனுமதித்தார், இந்த வசனத்தை எதற்காக வைத்தார் என்று தெரியவில்லை. அவல நகைச்சுவையில் சிரிக்க வைக்கும் நெல்சன் திலீப்குமாரே இப்படியொரு அவலத்துக்குக் காரணமாக இருப்பதை ஏற்க முடியவில்லை என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தார்மீக ரீதியாகவும், அறத்தின் படியும் சக மனிதனை இப்படியா காமெடி என்கிற பெயரில் தரக்குறைவான வசனங்களால் காயப்படுத்துவது? என்ற விமர்சனம் தற்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளது. உண்மையில் இதுபோன்ற மலினமான செயல்களை, நகைச்சுவை என்ற பெயரில் விமர்சிப்பதை படைப்பாளிகள், இயக்குநர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க | இந்தி திணிப்பு - எதிர்ப்பை கையில் எடுத்திருக்கும் விஜய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G