எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் தமக்கு தேசநலன் மட்டுமே முக்கியம். அதுவே தமது தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய இந்தியாவில் தேசத்தின் பாதுகாப்பு என்பதுதான் மிகமுக்கியமான பிரச்சனை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், வாரணாசியில் நேற்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றார்.
பீகார் மாநிலம், தார்பங்காவில் நடைபெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது, பாரத் மாதா கி ஜே… என்றும், வந்தே மாதரம்… என்றும், பரப்புரைக் கூட்டங்களில் தாம் கூறுவதும், அதற்கு தொண்டர்கள் ஒருமித்த குரலில், பதிலளிப்பதும், சிலருக்கு பிரச்சனையாக மாறியிருப்பது ஏன்? எனத் தெரியவில்லை என்று, பிரதமர் கூறியிருக்கிறார். இவ்வாறான நபர்கள், டெபாசிட் இழக்கச் செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் மோடி தெரிவித்திருக்கிறார்.
பாரதம் குறித்து தாம் பேசினால், அந்த குறிப்பிட்ட சிலர், அதுகுறித்தும் புலம்புவதாகவும், பிரதமர் கூறியிருக்கிறார். இவற்றையும் மீறி, இந்திய தேசம் குறித்தும் தாம் பேசினால், அந்த சில நபர்கள், தீவிரவாதம் பற்றி மோடி எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்புவதோடு, அது ஒரு பிரச்சினையே இல்லை என்று கூறுவதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
தேசத்தின் பாதுகாப்பு என்பது சிலருக்கு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம் என குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவிற்கு, இது மிகமுக்கியமான பிரச்சனையாக உள்ளதாகவும், சுட்டிக்காட்டியிருக்கிறார். பிறப்பெடுத்திருக்கும் புதிய இந்தியா, தீவிரவாதிகளின் முகாம்களுக்குள் புகுந்து, முற்றாக அழித்தொழிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.