பஞ்சாப் முதல்வாராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் எம்எல்ஏக்கள் கூட்டம் - நடந்தது என்ன?

Aam Aadmi Party: பஞ்சாப் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் பதவியேற்க இருக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து தற்போதைய முதல்வர் பகவந்த் சிங் மான் கூறியிருப்பதை இங்கு கூறியிருப்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2025, 03:48 PM IST
  • டெல்லியில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளையே கைப்பற்றியது.
  • பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி தற்போது ஆட்சியில் இருக்கிறது.
  • அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது எம்எல்ஏ கூட கிடையாது.
பஞ்சாப் முதல்வாராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் எம்எல்ஏக்கள் கூட்டம் - நடந்தது என்ன?  title=

Aam Aadmi Party Latest News Updates: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை இழந்திருக்கிறது. சாமனியர்களின் கட்சியாக தொடக்கத்தில் பார்க்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் (Arvind Kejriwal) இந்த ஆம் ஆத்மி கட்சி பல தேர்தல் தோல்விகளை இதற்கு முன் சந்தித்திருந்தாலும், அதன் அரசியல் பயணம் தொடங்கிய இடமான டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பது இதுவே முதல்முறை எனலாம்.

2013ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 49 நாள்களில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து, ஆட்சியை கலைத்தார். தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பின்னர் 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும், 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பஞ்சாப்பை உற்றுநோக்கும் அரசியல் வல்லுநர்கள்

கடந்த 2024 மக்களவை தேர்தலிலேயே பாஜகவிடம் ஆம் ஆத்மி தோல்வி அடைந்திருந்தாலும், இந்த சட்டப்பேரவை தேர்தல் தோல்விதான் அக்கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சியை இழந்தது ஒருபுறம் என்றால், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட புதுடெல்லி தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளார். பாஜக 48 இடங்களையும், ஆம் ஆத்மி 22 இடங்களையும் வென்றுள்ளன.

மேலும் படிக்க | பெற்றோருடன் உடலுறவு? இல்லை அதை பார்ப்பது...? பிரபலத்தின் ஆபாச கேள்வியால் சர்ச்சை

ஆம் ஆத்மி டெல்லியை தவிர்த்து பல்வேறு மாநில தேர்தல்களில் போட்டியிட்டாலும், டெல்லியை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில்தான் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பகவந்த் சிங் மான் முதலமைச்சராக உள்ளார். டெல்லியை ஆம் ஆத்மி கட்சி இழந்திருப்பதன் மூலம், பஞ்சாப் ஆம் ஆத்மி மீது பெரும் அழுத்தம் உருவாகியிருக்கிறது எனலாம். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளில், ஆம் ஆத்மி 93 தொகுதிகளையும், காங்கிரஸ் 16 தொகுதிகளையும் தன்வசம் வைத்துள்ளன. இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க இருக்கிறார் என பாஜக தரப்பில் இருந்து தகவல்கள் பரவின.

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் (Bhagwant Mann), ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள், தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை முன்னிட்டே பாஜகவின் எம்எல்ஏ மண்ஜிந்தர் சிங் சிர்சா, பகவந்த் சிங் மான் திறமையற்றவர் என பட்டம்கட்டி, அவரது பஞ்சாப் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் அபரிக்க உள்ளார் என பேசியிருந்தார். இது தற்போது தேசிய அரசியலில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் முதல்வராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

இந்நிலையில், டெல்லியில் நடந்த பஞ்சாப் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானிடம் பாஜக எம்எல்ஏவின் இத்தகைய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த பகவந்த் சிங் மான்,"அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்" என்றார். 

 

காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி

தொடர்ந்து பேசிய அவர்,"பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் எங்களின் வாக்குறுதியை எப்பாடுப்பட்டாவது நிறைவேற்றுவோம்" என்றார். மேலும், பஞ்சாப்பின் 20 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர்,"இதைத்தான் அவர் மூன்றாண்டுகளாக கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சி கடந்த மூன்று முறை டெல்லியில் எத்தனை தொகுதியை கைப்பற்றியிருக்கிறது என அவர் கணக்குப் போடவேண்டும்" என பகடி செய்தார். கடந்த 3 தேர்தல்களாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் ஆம் ஆத்மியில் மாற்றமில்லை

இன்றைய கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் பகவந்த் சிங் மான் பேசினார். டெல்லியில் மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இனி பஞ்சாப் மாநிலத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்றும் பகவந்த் சிங் மான் தெரிவித்தார். மேலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை இன்னும் முன்னேற்ற வேண்டும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் எவ்வித மாற்றமும் வராது என கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக அவர் கூறினார். மேலும், பஞ்சாப் எம்எல்ஏக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் அவர்களை இங்கு அழைத்துவந்து கூட்டம் நடத்தப்பட்டது என்றார். 

மேலும் படிக்க | மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News