Political News in Tamil: நாட்டின் எல்லைப்பகுதியில் அமைத்துள்ள இரண்டு மாநிலங்களான மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்) மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் (பஞ்சாப் முதல்வர்) ஆகிய இருவரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது, தனித்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதம் இருப்பதால், அதற்கு முன்னதாகவே இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே எந்தவித சிக்கலும் இல்லாமல் தொகுதி பங்கீடு இறுதி செயப்படும் என இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில முக்கியத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் மம்தா பானர்ஜி மற்றும் பகவந்த் மான் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயங்குவது ஏன்? இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? காங்கிரஸின் அடுத்த வியூகம் என்ன? இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் (இந்தியா கூட்டணி) இருந்துக் கொண்டு, அந்தந்த மாநிலங்களில் தனித்து போட்டியிடுவதாக உரத்த குரல் எழுப்பியதற்கு காரணம் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
கூட்டணி குறித்து காங்கிரஸின் பார்வை
முதலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் மத்திய தலைமை வெவ்வேறு வழிகளை கடைபிடிக்கிறது. எந்தெந்த மாநிலங்களி காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைவாக இருக்கிறதோ, அந்த மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவமும், செல்வாக்கு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் அதிக இடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. சிக்கலுக்கு காரணம் இதுவல்ல. சில மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சி இருவருக்கும் அதிக செல்வாக்கு இருப்பதால், இங்கு தான் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் அதில் அடங்கும்.
தனித்து போட்டியிடுவோம் என மம்தா கூறக் காரணம் என்ன?
மேற்கு வங்காளத்தில் தனித்து போராடுவோம் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி, வங்காளத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று (ஜனவரி 24, புதன்கிழமை) கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தெரிவிக்கப்படாததால் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்ததால், இதன் காரணமாக அவர் தனித்து போட்டியிடப் போவதாகக் கூறினார். பின்னர் மாலையில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜனவரி 13 அன்று மம்தாவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி, யாத்திரை குறித்து தெரிவித்ததாக விளக்கம் அளித்தனர். அந்தக் கடிதங்கள் அவரது காளிகாட் இல்லத்துக்கு வந்ததா அல்லது மாநிலச் செயலர் நபன்னாவுக்கு வந்ததா என்பது குறித்து தெரியவில்லை.
காங்கிரஸின் 'பாரத் ஜோடோ நியாய்' யாத்திரையின் பன்னிரண்டாவது நாளான இன்று (ஜனவரி 25, வியாழன்) மேற்கு வங்காளத்திற்குள் நுழைகிறது. இந்த யாத்திரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக் கொள்வாரா? காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள சிக்கல் தீருமா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
காங்கிரசுடன் கூட்டணி கிடையாது -பகவந்த் மான்
மம்தா பேசிய சில மணி நேரங்களில், சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
பஞ்சாபில் 13 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு சாத்தியமான 40 வேட்பாளர்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். "வோ உன்கா ஆபாஸ் மே சல் ரஹா ஹோகா (வங்காளத்தில் அவர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம்), லேக்கின் பஞ்சாப் மே ஹம் கட்பந்தன் நஹின் கரேங்கே (ஆனால் பஞ்சாபில் நாங்கள் கூட்டணிக்கு செல்ல மாட்டோம்)" என பகவந்த் மான் திட்டவட்டமாக கூறினார்.
சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ்
மம்தா பானர்ஜி, பகவந்த் மான் இருவரும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய பிறகு, பகவந்த் மான் தவிர்த்து விட்டு, மம்தாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தலையீடு இல்லாமல் இறுதி முடிவு செய்ய முடியாது என்றாலும், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை அடுத்தக்கட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பகவந்த் மானுக்கு தெரிவிக்கப்பட்டாலும், கூட்டணி பேச்சுவார்த்தை மேசையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
"திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தூண், மம்தா ஜி இல்லாத கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது. நாளை நமது யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகின்றன, விரைவில் நல்ல முடிவு வரும், அது அனைவரையும் திருப்திப்படுத்தும்" என்று நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் டெல்லிக்கான சீட் பகிர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் 'கூட்டணி கிடையாது' எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி 'குஜராத், கோவா மற்றும் ஹரியானா' ஆகிய மாநிலங்களில் கூட்டணி வைத்து போட்டியிட விரும்புகிறது. ஆனால் பஞ்சாப் மாநிலம் தான் சிக்கலாகவே உள்ளது.
இருவரும் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டால், டெல்லியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏழு தொகுதிகளியும் வெற்றி பெறுவதை தடுக்க முடியும், இல்லையென்றால் முடியாது என்பதை இரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கின்றன.
இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், டெல்லியில் உள்ள ஏழு இடங்களில் மூன்றில் ஆம் ஆத்மி கட்சியும், நான்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க பஞ்சாப் காங்கிரஸ் எதிர்ப்பு
பஞ்சாப் காங்கிரஸின் மாநிலத் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா உட்பட பஞ்சாப் காங்கிரஸின் சில முக்கியத் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு எதிராக உள்ளனர். மக்களைவத் தேர்தல் மட்டுமில்லை, 2027 சட்டமன்றத் தேர்தலையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே ஆம் ஆத்மி கட்சியுடன் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், கட்சியின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு ஆம் ஆத்மி தற்போது இல்லை. அதேபோல சிரோமணி அகாலி தளம் சீர்குலைந்துள்ளது மற்றும் பாஜக சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடன் உள்ளது. 2027ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்தால், சட்டசபை தேர்தலில் தங்களை கட்சிக்கு ஆபத்து என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
பஞ்சாபில் ஆட்சி, குஜராத்தில் மூன்றாவது பெரிய கட்சி
2019 மக்களவைத் தேர்தலில், பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் 8ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து அரசாங்கத்தை அமைத்து. அதேபோல முதல்முறையாக குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 12.92 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. குஜராத்தில் கிட்டத்தட்ட 50 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் சொற்ப வாக்கு வித்தியாசத்தி தோற்றது. அதற்கு முக்கியக் காரணமாக ஆம் ஆத்மி கட்சி. அதேபோல கடந்த மே மாதம், 24 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஜலந்தர் மக்களவைத் தொகுதியை ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் இழந்தது.
மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ