தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?

Lok Sabha Election 2024: இந்த ஐந்து மாநில தேர்தல் அரையிறுதி வெற்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் தொடருமா? பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா? இல்லை இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா? அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 5, 2023, 04:54 PM IST
தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன? title=

Lok Sabha Election Semi-Final: லோக்சபா தேர்தலின் அரையிறுதியாக கருதப்படும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அக்கட்சி மத்திய பிரதேசத்தில் 163 இடங்களிலும், ராஜஸ்தானில் 115 இடங்களிலும், சத்தீஸ்கரில் 54 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதேசமயம் தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

காங்கிரஸின் அனைத்து வியூகங்களும் தோல்வி

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில், காங்கிரஸ் இந்த முறை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் வேண்டும் என்று கனவு கண்டது. அதே நேரத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு எதிரான அலையைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) அன்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தையும் தெளிவுபடுத்தியது மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அரசியல் ஆய்வாளர்கள் இத்தகைய தேர்தல் முடிவுகளை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதேசமயம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் நீண்ட காலமாக பாஜக பலவீனமாக கருதப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தைத் தவிர, இரு மாநிலங்களிலும் பெரும்பான்மையைப் பெற்றதன் மூலம் காங்கிரஸின் அனைத்து வியூகங்களையும் அக்கட்சி சிதைத்துள்ளது.

பாஜகவின் மாபெரும் வெற்றி

பாஜகவின் இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்ற நரேந்திர மோடி, இன்றைய ஹாட்ரிக் 2024-ன் ஹாட்ரிக் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்று கூறினார். தற்போது பலரின் மாநாட்டில் எழும் கேள்வி ஒன்று தான். இந்த தேர்தல் அரையிறுதியில் பெரிய வெற்றிக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா? என்பது தான்.

மேலும் படிக்க - INDIA Alliance: இந்தியா கூட்டணியில் விரிசல்? 3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுப்பு

இந்த சட்டசபைத் தேர்தல் அரையிறுதி என்று அழைக்கப்பட்டது ஏன்?

நான்கு மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா) சட்டமன்றத் தேர்தல்களும் அரையிறுதி என்று அழைக்கப்பட்டன. ஏனெனில் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு அதாவது 2024 இல் நடைபெற உள்ளது மற்றும் இந்த 4 மாநிலங்களில் இருந்து 82 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

நாட்டில் மொத்தம் 542 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மத்திய பிரதேசத்தில் 29, ராஜஸ்தானில் 25, சத்தீஸ்கரில் 11, தெலுங்கானாவில் 17 மற்றும் மிசோரமில் ஒரு இடங்கள் உள்ளன. இவற்றையும் சேர்த்தால் ஐந்து மாநிலங்களில் மொத்தம் 83 இடங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த அரையிறுதி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான பாதையை எளிதாக்கலாம். அதேநேரத்தில் 2003ல் இருந்து, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் வெற்றிகள் ஒரே மாதிரியாக இல்லை.

2024 தேர்தல் பாஜகவுக்கு எளிதானதா?

கவுன்சிலர் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை பாஜக முழு ஆர்வத்துடன் போராடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் ஒவ்வொரு தொண்டர்களும், நிர்வாகிகளும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சட்டசபை தேர்தலில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை, லோக்சபா தேர்தலிலும் பெற, அக்கட்சி செயல்படும்.

இந்த மாபெரும் வெற்றியின் கொண்டாட்டத்தை மக்களவைத் தேர்தல் வரை தொடர பாஜக முயற்சிக்கும். அதே சமயம் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு இந்த வெற்றி பெரும் பலனை அளிக்கும். இந்த மாநிலங்களில் கிடைத்த வெற்றி, வரும் நாட்களில் பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை நிரப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

அதே சமயம் மோடி மேஜிக் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்த லோக்சபா தேர்தலிலும் இதை பயன்படுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதனால் கட்சிக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

எதிர்க்கட்சிகளின் "இந்தியா கூட்டணி" செயல்படுமா?

இந்த ஆண்டு ஜூலை மாதம், 26 எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ள கூட்டணி அமைத்தன. அதற்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) என்று பெயரிடப்பட்டது. லோக்சபா தேர்தலுக்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தங்கள் சொந்த மட்டத்தில் போட்டியிட்டன. இந்த கூட்டணி சட்டசபை தேர்தலில் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்து இருந்தால், தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வந்திருக்கலாம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.  இது குறித்து அதிருப்தி தெரிவித்த அகிலேஷ், லோக்சபா தேர்தலில் ஒன்றாக இருக்கலாமா வேண்டாமா என்பதை பரிசீலிப்பதாக கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கோபம் தொடர்ந்தால் லோக்சபா தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடலாம்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​பல மாநிலங்களில் விமர்சனங்களைச் சந்திக்க நேரிட்டது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல பெரிய தலைவர்களும் சற்று விலகி இருந்தனர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேச மறுத்துவிட்டனர். 

எவ்வாறாயினும், இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியில் இடங்கள் பகிர்ந்துக் கொள்வது குறித்த உடன்பாட்டை எளிதாக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க - காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? - சனாதான சர்ச்சையும் வடஇந்திய பின்னடைவும்!

கற்பனைக்கு அப்பாற்பட்டது 'இந்திய அரசியல்'

இந்திய அரசியல் எப்போதுமே கற்பனைக்கு அப்பாற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் பார்த்தால், இந்த மூன்று மாநிலங்களிலும் (எம்.பி., சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான்) பாஜக தோல்வியடைந்தது. ஆனால் இந்தத் தோல்வியின் தாக்கம் பொதுத் தேர்தலில் எதிரொலிக்கவில்லை. பாஜக வெற்றி பெற்றது. தற்போது இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரசை பாஜக அழித்துவிட்டது எனக் கூறலாம். ஆனால் இந்த சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், மக்களவையிலும் எதிரொலிக்கும் என்ற யூகங்களை பல அரசியல் ஆய்வாளர்கள் தவிர்க்கின்றனர்.

சட்டசபை வெற்றியால் லோக்சபா வெற்றியும் உறுதியா?

கடந்த காலப் புள்ளி விவரங்களைப் பார்த்தால், சட்டசபைத் தேர்தல் வெற்றி, மக்களவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யாது என்பதையே காட்டுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் வெற்றியானது லோக்சபா தேர்தலில் எப்படி எதிரொலித்துள்ளது என்பதைக் குறித்து பார்ப்போம்.

மத்தியப் பிரதேசம் தேர்தல் நிலவரம்

மத்தியப் பிரதேசத்தின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால், 1998-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது, ஆனால் இரண்டாவது ஆண்டில் அதாவது 1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதேசமயம், 2003 மற்றும் 2004ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இது தவிர, 2008ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், மாநிலத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில், 16 இடங்களை பாஜக பெற்றிருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதோடு, 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைப்பதில் கமல்நாத் வெற்றி பெற்றாலும், 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் திருப்தி அடைய வேண்டியிருந்தது. இருப்பினும், 20 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது, சிவராஜ் மீண்டும் தனது அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க - பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

ராஜஸ்தான் தேர்தல் நிலவரம்

ராஜஸ்தானின் வரலாற்றைப் பார்த்தால், 1998-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று, அசோக் கெலாட் முதலமைச்சரானார், ஆனால் அடுத்த ஆண்டு, அதாவது 1999, மக்களவைத் தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு, 2003 முதல் 2014 வரையிலான ராஜஸ்தானின் வரலாறு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி மக்களவைத் தேர்தலிலும் வெற்றியை ருசித்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது இந்த முறையில் மாற்றம் காணப்பட்டது, ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில், பாஜக 25 இல் 24 இடங்களை வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

சத்தீஸ்கர் தேர்தல் நிலவரம்

சத்தீஸ்கர் தனி மாநிலமாக 2000 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் பாஜக தொடர்ந்து வெற்றி மகுடத்தை அணிந்து வந்த நிலையில், அப்போது காங்கிரஸ் ஓரிரு இடங்களில் மட்டுமே திருப்தி அடைய வேண்டியிருந்தது. ஆனால், 2018ல் இங்கு அரசியல் காட்சிகள் மாறி, 90க்கு 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி மகுடம் சூடியது.

தெலுங்கானா தேர்தல் நிலவரம்

தெலுங்கானா 2013ல் உருவாக்கப்பட்டது. அதன்பின், மாநிலத்தில் மூன்று சட்டசபை மற்றும் இரண்டு லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. 2013-14 மற்றும் 2018-19 இல் கலவையான முடிவுகள் இங்கு காணப்பட்டாலும், 2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இங்கு வெறும் 8 இடங்களில் மட்டுமே பாஜக திருப்தி அடைய வேண்டியிருந்தது.

மேலும் படிக்க - Rajasthan Elections Result 2023: ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்க இந்த 5 பிரச்சினைகள் தான் காரணம்

மிசோரம் தேர்தல் நிலவரம்

மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் (எம்என்எப்) காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இது தவிர, மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக ஜோரம் மக்கள் இயக்கம் உள்ளது. மாநிலத்தின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால், 1998 முதல் 2008 வரை மிசோ தேசிய முன்னணி (MNF) அரசாங்கமும், 1999 முதல் 2004 வரை இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர். 2018 சட்டமன்றத் தேர்தலிலும் மிசோ தேசிய முன்னணி (MNF) மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மக்களவைத் தேர்தலிலும், அதே கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்தியா கூட்டணி பலம் பெற வேண்டும்

இனி அடுத்த ஐந்து மாதம் அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஐந்து மாநிலத் தேர்தலை அடுத்து இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணி உடையாது, அது மேலும் பலப்படும் எனவுள் சில அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார். வரும் 2024 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணியால் புதிதாக ஏதாவது செய்ய முடியும் என நம்புகிறார்கள்.

2024 தேர்தலில் பா.ஜ.,வுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ​​புல்வாமா, பாலகோட் போன்ற சம்பவங்கள் மூலமாக தேசியவாதச் சூழல் உருவாகி, அதன் காரணமாக பாஜக பலனடைந்தது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. மேலும், 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிரான போக்கு மக்கள் மத்தியில் இருக்கும். இது தவிர வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளையும் பாஜக சந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஓபிசி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதன் தாக்கம் சாமானியர்கள் மத்தியில் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பா.ஜ.,வுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம். எனவே பாஜக இந்தத் தேர்தல்களில் முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் படிக்க - அடுத்த முதல்வர் யார்? மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்.. சண்டை ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News