Ayurvedic Detox Drink: உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு, கை வைத்தியம் அல்லது வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக தீர்வு காணலாம். இதன் மூலம், மருந்துகளால் ஏற்படும் பல பக்க விளைவுகளையும் தடுக்கலாம். அந்த வகையில் பல பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆயுர்வேத டீ குறித்து ஆயுர்வேத மருத்துவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேத டீயான CCF டீ, சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் (Cumin Seeds Coriander and Fennel Seeds) ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆயுர்வேத டீ, மிகச் சிறந்த டீடாஸ் பானமாக இருக்கும் என்றும் இதனை குடிப்பதால் செரிமானம் சிறப்பாக இருக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக செரிமானம் சிறப்பாக இருந்தாலே, 90 சதவிகித நோய்களை நாம் வராமல் தடுத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறந்த ஆயுர்வேத டீடாக்ஸ் டீ தயாரிக்கும் முறையையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேத டீடாக்ஸ் டீ அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
1. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து கழிவுகளை அகற்றும் பானம்
2. உடல் வீக்கத்திலிருந்து நிவாரணம்
3. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக்கும் பானம்.
4. வயிறு மற்றும் குடல் பிடிப்புகளை ஆற்றும் திறன்
5. வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம்
6. வயிற்று வலியைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட பானம்
7. வளர்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும் ஆற்றல்.
8. குமட்டல் மற்றும் வாந்தி போன்ற ஆஜீரண பிரச்சனைகள் நீங்கும்.
9. பெண்களுக்கு மாதவிடாய் பிடிப்புகள் உள்ளிட்ட பிற பிரச்சனைகளைத் தீர்க்கும்.
10. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் அருமருந்து.
11. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகப்பருவை நீக்கும் ஆற்றல்
12 . கொழுப்பு கல்லீரலுக்கு சிறந்த பானம்
ஆயுர்வேத டீ தயாரிக்கும் முறை
CCF ஆயுர்வேத தேநீர் தயாரிக்க உங்களுக்கு தேவையான பொருட்கள்
1. சீரகம்
2. கொத்தமல்லி விதை
3. சோம்பு அல்லது பெருஞ்சீரகம்
CCF ஆயுர்வேத தேநீர் தயாரிக்க, முதலில் ஒரு கண்ணாடி ஜாடியில் தேநீர் தயாரிக்க தேவையான 3 பொருட்களையும் சம அளவில் கலந்து வைக்கவும். தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஒவ்வொரு நபருக்கும் தலா 1 தேக்கரண்டி சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்கும் நீரில் குறைந்தது 7-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வடிகட்டி குடிக்கவும்.
டீடாக்ஸ் டீ குடிக்க சரியான நேரம் எது?
டீயை குடிக்க சரியான நேரம் அதிகாலை. இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து வழக்கமாக நீங்கள் சாப்பிடுவதை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், கருஞ்சீரகம் விதைகள் மாதவிடாய் ஓட்டத்தைத் தூண்டும். எனவே கர்ப்ப காலத்தில் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசிக்காமல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு வேறு ஏதேனும் உடல் நல பிரச்சனை இருந்தாலும், உங்கள் மருத்துவரை ஆலோசித்த பின் அருந்தவும்.
செரிமானப் பிரச்சனைகள், தைராய்டு, மலட்டுத் தன்மை, ஹார்மோன் பிரச்சனைகள், சர்க்கரை நோய், PCOS ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஆயுர்வேத டீ மிகவும் நல்லது என்கின்றனர் ஆயிர்வேத மருத்துவர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: சோரியாசிஸ் பாதிப்பாக இருக்கலாம்