கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த அலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இன்றி அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதையடுத்து, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.