தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவற்றின் எல்லைகள் இணைந்த வனப்பகுதி முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு புலிகள் மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. முதுமலை வனப்பகுதியின் கிழக்கு எல்லையில் உள்ள தெங்குமரகடா கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் செறிந்து காணப்படும் பகுதியாக உள்ளது.
1948-ல் அந்த வனப்பகுதி நிலங்கள் பொதுமக்கள் விவசாயம் செய்வதற்காக அரசு குத்தகைக்கு வழங்கியது. அப்பகுதியில் மனிதர்கள் - விலங்குகள் மோதல் அதிகமானதால், அந்த வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டுமென முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவை வனப் பாதுகாவலர் 2011ல் பரிந்துரைத்திருந்தார். அதுதொடர்பான வழக்கில், அங்குள்ள 497 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் வீதம் 74 கோடியே 55 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்த தமிழக அரசு, அந்த பரிந்துரையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியது.
ஆனால், ஆணையத்தில் போதிய நிதி இல்லை என கூறிய மத்திய அரசு, அதற்கு மாற்றாக தேசிய வன மேம்பாட்டு நிதியம் மற்றும் திட்ட ஆணையம் மூலமாக நிதி ஒதுக்க முடிவு செய்தது. ஆனால், அந்த நிதியை ஒரு கிராமத்தை மாற்றுவதற்காக பயன்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தெங்குமரகடா வனப்பகுதி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், D.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, வனப்பகுதியை மீட்டு எடுப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், உடனடியாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அந்த தொகையை பெற்ற 2 மாதங்களில், அதை தமிழகத்தின் தலைமை முதன்மை வனப் பாதுகாவலருக்கு விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். ஆணையத்திடமிருந்து பெற்ற தொகையை பயன்படுத்தி 4 வாரங்களில் 497 குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்கி, வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை முதன்மை வனப் பாதுகாவலருக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ