இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிக்கையின் படி, வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை மிக மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி வருவதால் இரண்டு மாநிலங்களில் கனமழை தரும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் கேரளாவில் இடுக்கி, பாலக்காடு மற்றும் திரிசூர் மூன்று மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 5,6,7 ஆம் தேதிகளில் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடுத்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன், "அக்டோபர் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூன்று மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மத்திய அரசிடம், தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை உட்பட ஐந்து அமைப்பிடம் உதவி கேட்டுள்ளோம்.
கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் வரும் 5 ஆம் தேதிக்குள் கரைக்கு வருமாறு கூறப்பட்டு உள்ளது. மேலும் அக்டோபர் 5,6,7 ஆம் தேதிகளில் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்யப்பட்டு நெருக்கடிக்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவு போடப்பட்டது. சுற்றுலா சென்றுள்ள பயணிகள் மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக மூனாறுக்கு செல்பவர்கள் அதனை தவிர்க்கலாம் எனவும் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.
ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.