Coimbatore Constituency Winning Candidate Prediction : நாடு முழுவதும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்குமான இடைத்தேர்தலும் வரும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி திமுக தலைமையிலும், தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையிலும், அதிமுக தனிக் கூட்டணியிலும் என மும்முனை போட்டி நிலவுகிறது.
ரவீந்திரன் துரைசாமியின் கணிப்பு
ஏப். 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், வரும் ஏப். 17ஆம் தேதி மாலையோடு தேர்தல் பரப்புரையும் நிறைவடையும். அந்த வகையில், அனைத்து கட்சிகளும் தங்களின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் வேளையில், கள நிலவரம் குறித்து பல்வேறு அரசியல் நிபுணர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பி - ஜெயக்குமார் விளாசல்
அந்த வகையில், தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் கோவை மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது என்பது நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்த கணிப்புகளை இங்கு காணலாம்.
கோவை நிலவரம் என்ன?
அதற்கு முன், கோவை மக்களவை தொகுதியின் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். கோவை தொகுதியில் தற்போது 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இங்கு 66.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர். நடராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஸ்டாலின் இதில் தெளிவாக உள்ளார்...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இங்கு போட்டியிடும் ஒரே காரணத்தால் இந்த தொகுதி வழக்கத்தை விட அதிக கவனத்தை பெற்றுள்ளது. இந்த தொகுதியின் வெற்றி நிலவரம் குறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி பேசியாதவது,"அண்ணாமலை ஒரு நட்சத்திர வேட்பாளராக வெற்றி பெற்றுவிடக்கூடது என்பதில் மு.க. ஸ்டாலின் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார். அதனால்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து கோவை தொகுதியை திமுக வாங்கியது, இதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை சிபிஎம் கட்சியிடம் திமுக கொடுத்துள்ளது.
திமுகவுக்கான சாதகங்கள்
அண்ணாமலை போல் ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில், செந்தில் பாலாஜியின் ஆதரவு பெற்ற கணபதி ராஜக்குமார் என்பவரை திமுக களமிறக்கி உள்ளது. இதில், கொங்கு வெள்ளாள வேட்பாளர் என்பதால் வணிகம் சார்ந்த மக்கள் ஆளுங்கட்சிக்குதான் அதிகம் வாக்களிப்பார்கள் என்பதால் அவர்களில் பெருவாரியான வாக்குகள் திமுகவின் பக்கம் விழும். அதுமிட்டுமின்றி கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர் அல்லாத வாக்குகள் பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குகள். அதையும் திமுக அறுவடை செய்யும். அதிமுகவுக்கு எதிரான மனநிலையும் அங்கு நிலவுவதால் திமுகவுக்கு அதுவும் சாதகமாக உள்ளது.
மேலும், அண்ணாமலை அங்கு வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் அதிமுகவும் மிகுந்த கவனத்துடன் இருப்பதால் அவர்களும் சிங்கை ராமசந்திரன் என்ற நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்த வேட்பாளரையே நிறுத்தியுள்ளனர். மேலும், பாஜகவுக்கு இருக்கும் 10% அமைப்பை வைத்துக்கொண்டு அண்ணாமலை வெற்றி பெற முடியும் என நான் சொல்ல மாட்டேன்.
அதிமுக vs பாஜக
இருப்பினும், தமிழ்நாட்டில் மோடிக்கு செல்வாக்கை அதிகரித்து தருவதில் அண்ணாமலை முக்கியமானவராக இருப்பார். குறிப்பாக, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் போன்றோரால் அதை செய்ய முடியாது, அண்ணாமலையால் முடியும். ஆனால், அவரால் இப்போது வெற்றி பெற முடியாது. அண்ணாமலை களத்தில் இறங்கி முழு வீச்சில் வேலைப்பார்க்கிறார். திமுகவுக்கு எதிரான அரசியலை கொண்டு, அதிமுகவை ஓரங்கட்டுவதன் மூலமே பாஜக வளர்வதற்கான ஒரே வழி.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் ஆர்கனைஸரான எஸ்.பி. வேலுமணியும் அதிமுக வேட்பாளருக்காக கடினமாக வேலை பார்க்கிறார். எனவே, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருக்கும். அண்ணாமலையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்த பெருச்சாளிகளை சும்மா விடமாட்டேன் என எஸ்.பி. வேலுமணியை தாக்கி வருகிறார். எனவே, அதிமுக - பாஜகவுக்குதான் இரண்டாம் இடத்திற்கான போட்டி. அமைப்பு பலத்தை தாண்டி அண்ணாமலை வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான், அவர் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், யதார்த்த கள நிலவரம் திமுகவுக்கே சாதகமாக உள்ளது" என்றார்.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ