தமிழகம் முழுவதும், 32 மாவட்டங்களில் உள்ள, 434 வட்டாரங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கான, 'சமுதாய வளைகாப்பு' விழா கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகம் முழுவதும், 90 ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தலைமையில், வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில், 5 மாதங்கள் முதல், 9 மாதங்கள் வரையுள்ள, 5 முஸ்லிம் பெண்கள் உட்பட, 300 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், அமைச்சர் சரோஜா, கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கிட்டு, மாலை, வளையல் அணிவித்து, பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை, கர்ப்ப கால பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து, பெண் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
பெரும்பாலும் வளைகாப்பு என்பது, முதல் குழந்தை பெறும் போது, பெண்களுக்கு செய்யப்படும் சடங்காக உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே குழந்தை பெற்று, இரண்டாவதாக கர்ப்பமடைந்த சில பெண்களும் விழாவில் பங்கேற்றனர்.
கர்ப்ப காலத்தில் பெண்கள், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம், பிரசவம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வும், குழந்தை நலம் மற்றும் வளர்ப்பு குறித்து ஆலோசனையும் அளிக்கப்பட்டது.