பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார்!!
ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் பாகுபலி படத்தில் வரும் காட்சியில், பிரபாசின் முகத்திற்கு பதிலாக ட்ரம்பின் முகம் மார்பிங் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா போன்றோரின் முகங்களும் ஆங்காங்கே மார்பிங் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில், ட்ரம்பின் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனை ரீட்வீட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப், இந்தியாவில் தனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக அந்த ட்விட்டர் பதிவி குறிப்பிட்டுள்ளார்.
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். நாளை காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வரும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு விமான நிலையத்தில் சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரம்மநாதம் என்று அழைக்கப்படும் இந்த ஒலி பிரபஞ்சத்தில் காணப்படும் அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களையும் நேர்மறை எண்ணங்களையும் உள்ளிளுக்கும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து 150 அடி நீள சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் டிரம்ப் தம்பதியை வரவேற்க நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
பின்னர் அங்கிருந்து புறப்படும் டிரம்ப் குழுவினருக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மொதிரா மைதானம் வரை லட்சகணக்கானோர் வழிநெடுக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதேபோல் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி, அகமதாபாத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டும், ஏற்கெனவே இருக்கும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. முக்கிய பகுதிகளில் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு, சுவர்களில் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது. மொதிரா மைதானமும் அழகுபடுத்தப்பட்டு அங்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் அரை மணிநேரம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்தாகலாம் என்ற தகவல்கள் பரவின. இந்நிலையில் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் விஜயம் செய்வார் என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து டிரம்ப்பும் வர இருப்பதாக ரூபானி தெரிவித்துள்ளார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் டிரம்ப் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.