பா.ம.க பேசும் மக்களின் பிரச்சினைகளை வெளியில் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
இதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது:-
ஊடகங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி உறவுகள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், ஊடகங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதுமே உரிய இடம் வழங்கப்படுவது இல்லை.
தமிழகம் எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்சைனைகள் குறித்தும் பா.ம.க. தான் உடனுக்குடன் குரல் எழுப்புகிறது. பா.ம.க. சார்பில் நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் வெளியிடும் அறிக்கைகள் மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்றன. பிரச்சினைகளைப் பற்றி மட்டுமின்றி, அவற்றுக்கானத் தீர்வுகளையும் பா.ம.க. வெளியிடும் அறிக்கைகள் முன்வைக்கின்றன. ஊடக நண்பர்களின் கண்களுக்கு இவை தெரியக்கூடும். ஆனால், தெரியவிடாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
2018-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து நான் 82 அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 47 அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். அனைத்துமே மக்கள் பிரச்சினைகளை பேசுபவை. ஆனால், ஊடகங்களில் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருப்பவர் மக்களுக்காக குரல் கொடுப்பதில்லை. பா.ம.க. கொடுக்கும் அறிக்கைகளில் பாதியளவுக்குக் கூட அவர் தருவதில்லை. ஆனால், அவர் தரும் அறிக்கைகள் மூன்றாம் பக்கத்திலும், ஐந்தாம் பக்கத்திலும் பத்தி பத்தியாக வெளியிடப்படும். என்ன செய்வது ஊடகங்களில் இப்படி ஒரு நவீன தீண்டாமை.
ஆனால், இதற்காக ஊடகக் கூட்டாளிகள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். பா.ம.க.வின் அறிக்கைகள் புள்ளி விவரங்களுடன் சிறப்பாக உள்ளன; முக்கியப் பிரச்சினைகளை முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
எனினும், சில ஊடகங்களில் முழுமையாகவும், சில ஊடகங்களில் சிறிதளவுக்குக் கூட பா.ம.கவின் அறிக்கைகளை வெளியிட முடிவதில்லை. காரணம் ஒருபுறம் பெரியண்ணனான ஆளுங்கட்சியும், மறுபுறம் சிறியண்ணனான எதிர்க்கட்சியும் ஊடகங்களுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் கொடுக்கும் நெருக்கடி தான். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் தடைபட்டுவிடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள். அவர்களுக்கு எனது அனுதாபங்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள். தமிழகத்தின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஊடகங்களுக்கு உண்டு. எனவே, நெருக்கடிகளையும் கடந்து பா.ம.க.வின் குரல்களை எதிரொலியுங்கள். வாருங்கள் நாம் இணைந்து புதியதோர் தமிழகம் செய்வோம்!
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.