Google Search Year Ender 2024 Tourist Places: 2024ஆம் ஆண்டில் இந்திய மக்களால் கூகுள் வலைதளத்தில் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்களை இங்கு காணலாம்.
சுற்றுலா செல்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் உடனே எங்கு சுற்றுலா செல்லலாம் என்பதே பலரும் திட்டமிடும் ஒன்றாக இருக்கும். தங்களுக்கு அருகில் இருக்கும் சுற்றுலா தலங்கள் தொடங்கி, வெளிநாடுகள் வரை நமது மக்கள் பிளான் போட்டு வைப்பார்கள். போகிறார்களோ இல்லையா ஆனால் அங்குள்ள வசதிகள் குறித்தும், அங்கிருக்கும் சுற்றுலாவுக்கான விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்வார்கள். அந்த வகையில், இந்தாண்டு கூகுள் வலைதளத்தில் இந்தியர்களால் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள் குறித்து இங்கு காணலாம்.
10. தெற்கு கோவா: இதுதான் இந்த பட்டியலில் 10ஆவது இடத்தை பிடிக்கிறது. இங்குள்ள பரந்து விரிந்த கடற்கரைகள், சொகுசு விடுதிகள், போர்த்துகீசிய பாரம்பரியம் நிறைந்த கட்டடங்கள் பெரிதும் சுற்றுலா பயணிகளை கவருகின்றன. எனவே பலரும் இந்த இடம் குறித்து தெரிந்துகொள்ள அதிகம் விருப்பப்படுகின்றனர்.
9. காஷ்மீர்: அழகான பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், ஏரிகள் இங்கு சுற்றுலா பயணிகளை கவருகின்றன. படகுகளில் தங்குவது, ரம்மியமான குல்மர்க் நகரம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீநகர் ஆகியவை இங்கு உள்ளன.
8. அயோத்தி: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கு அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டது. எனவே, பலரும் இங்குள்ள ராமர் கோயிலுக்கு வருகை தரும் நோக்கில் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்கள். ஆன்மீக சுற்றுலா தலங்களில் அயோத்தி தற்போது சிறப்பான இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7. மலேசியா: இந்தியர்கள் பலரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என திட்டமிடுவார்கள். அதில் மலேசியாவுக்கு எப்போதுமே தனியிடம் இருக்கும். இரட்டை கோபுரம், பரபரப்பான இரவு சந்தைகள், மலை மீது அமைந்திருக்கும் முருகன் கோவில் உள்ளிட்ட பல இடங்கள் இந்தியர்களை ஈர்க்கின்றன.
6. ஜார்ஜியா: மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பியாவில் இந்த ஜார்ஜியா நாடு அமைந்திருக்கிறது. வடக்கு, வடமேற்கு பகுதியில் ரஷ்யா, மேற்கு பகுதியில் கருங்கடல், தெற்மேற்கு பகுதியில் துருக்கி, தெற்கு பகுதியில் அர்மேனியாவில், தென்கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் ஜார்ஜியாவை சூழ்ந்துள்ளன. அசரைவக்கும் மலைப்பகுதிகள், கருங்கடல் கடற்பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.
5. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகரான இது சுற்றுலா பயணிகள் அதிகம் தேடும் இடங்களில் 5ஆவது இடத்தை பிடிக்கிறது. இதன் ராஜ தோரணை, பிரம்மாண்டமான கோட்டைகள், வண்ணமயமான கடைவீதிகள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
4. கஜகஸ்தான்: பழமையான சாலைகள், வானுயர்ந்த மலைகள், நவீனமயமான நகரங்களை சுற்றிப்பார்க்க பலரும் கஜகஸ்தான் வருவார்கள். இயற்கை எழில் மிகுந்த, வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம் சாகச்ததை விரும்பும் சுற்றுலா பயணிகளை அதிகம் விரும்புகிறது.
3. மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இந்த சுற்றுலா தலத்திற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றன. பனிச்சறுக்கு, தெளிந்து ஓடும் நதிகள், உறைந்த அருவிகள், இயற்கை நிறைந்த கிராமங்கள் இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றனர்.
2. பாலி: இந்தோஷியாவின் இந்த தீவை இந்தியர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதன் ரம்மியமான கடற்கரைகள், இயற்கை நிறைந்த சூழல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. இந்தியாவில் இருந்து ஹனிமூன் செல்வதற்கு பலரும் இந்த இடத்தை தேர்வு செய்வார்கள்.
1. அஜர்பைஜான்: கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடாகும். இதன் நவீனமயமான கட்டடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பயணிகளை ஈர்க்கின்றன. சாகசம், கலாச்சாரம், வித்தியாசமான உணவு வகைகளை விரும்புவோருக்கு இது ஒரு பொக்கிஷம். எனவே தான் இந்தியர்களின் தேடுதலில் இந்த வருடம் அஜர்பைஜான் முதலிடத்தை பிடித்துள்ளது.