பால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பால் எலும்புகளை வலுப்படுத்துவதோடு நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. மேலும் மனச்சோர்வு மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.
.
பால் நம் உடலுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பானமாகும். ஆனால், ஆயுர்வேதத்தின்படி, தெரிந்தோ தெரியாமலோ, நாம் பாலுடன் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் நம் உடலுக்கு தீங்கு விளையக்கூடும். இதன் காரணமாக நமது உடல்நிலை மோசமடையவும் வாய்ப்புண்டு.
நம்மில் பலர் மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துடன் பாலை கலந்து மில் ஷேக்காக குடிக்க விரும்புவதுண்டு. சிலர் வெண்ணெய் தடவப்பட்ட பிரெட்டுடன் பால் குடிக்க விரும்புவதுண்டு. சிலர் பிஸ்கெட்டுடன் பால் குடிக்க ஆசைப்படுவதுண்டு. ஆயுர்வேதத்தின் படி, எவற்றோடெல்லாம் பாலை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பால் மற்றும் தயிர் இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இரண்டையும் ஒருபோதும் ஒன்றாக உண்ணக்கூடாது. அப்படி செய்தால் அமிலத்தன்மை, வயிற்றில் வாயு மற்றும் வாந்தி சங்கடம் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். மேலும், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
பால் குடித்தபின் அல்லது பால் குடிப்பதற்கு முன்பு உடனடியாக புளிப்பு பழங்கள் அல்லது புளிப்பான சுவை கொண்ட பொருட்களை உட்கொள்ளக் கூடாது. அப்படி செய்தால், அதிகப்படியான அமிலம் வயிற்றில் உருவாகத் தொடங்குகிறது, இது வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பலர் மில்க் ஷேக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். எனினும், ஆயுர்வேதத்தின்படி, வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் நச்சு கூறுகளை உருவாக்கக்கூடும். இது செரிமான சக்தியையும் பலவீனப்படுத்துகிறது.
மீன் உஷ்ணத்தை ஏற்படுத்துகிறது, பால் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இரண்டு மாறுபட்ட தன்மைகள் கொண்ட உணவுகளை ஒன்றாகச் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மீன் சாப்பிட பிறகு பால் குடிப்பது வயிற்று வலியை ஏற்படுத்தும். உணவுக்கு விஷத்தன்மையை கொடுக்கும்.
பாகற்காய், வெண்டைக்காய், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட பிறகும், பயறு மற்றும் உளுத்தம் பருப்பு உண்ட பிறகும் பால் குடிக்கக்கூடாது. இவற்றுடன் பால் குடித்தால், உடலில் தொற்று, அரிப்பு, தோலழற்சி மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.