நீல ஆதார் அட்டை என்பது குழந்தைகளுக்கான ஆதார் ஆகும். இவற்றில் குழந்தையின் புகைப்படம் மட்டுமே இருக்கும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆதார் அட்டை நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. வங்கிக் கணக்குகளைத் திறப்பது முதல் அரசாங்கத் திட்டங்களை அணுகுவது வரை பல்வேறு அம்சங்களில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது, பல திட்டங்களை பெறுவதற்கு இது ஒரு கட்டாய ஆவணமாக அமைகிறது.
கூடுதலாக, வருமான வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், வழக்கமான ஆதார் அட்டையுடன், நீல நிற ஆதார் அட்டையும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீல நிற ஆதார் அட்டையானது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இந்த அட்டை குறிப்பாக 5 வயது அல்லது அதற்கு குறைவான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீல நிற ஆதார் அட்டை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
5 ஆண்டுகளுக்கு பிறகு, இதனை புதுப்பிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்களது சொந்த ஆதார் அட்டைகள், முகவரிச் சான்று, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்களை இதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதும், ஆதார் அட்டை வழங்கப்பட்டு, குறிப்பிட்ட முகவரிக்கு 60 நாட்களுக்குள் அனுப்பப்படும். ஆதார் அட்டையுடன் தொடர்புடைய பலன்களைத் தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்ய, குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு, நீல நிற ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஒரு குழந்தைக்கு 5 வயது முடிந்தவுடன், அவர்கள் நீல ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது. இந்த அட்டையானது வழக்கமான ஆதார் அட்டையில் இருந்து வேறுபட்டது, அதில் குழந்தையின் புகைப்படம் மட்டுமே இருக்கும்.