TN Budget 2025: மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ்நாடு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் மீது ஏற்கெனவே பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. கடந்தாண்டை போலவே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) 2025-26 நிதியாண்டியிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்தாண்டும் பல்வேறு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று ஏறத்தாழ 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2021-22 பட்ஜெட், 2022-23 பட்ஜெட், 2023-24 பட்ஜெட், 2024-25 என நான்கு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளது.
இதில், 2021-22, 2022-23, 2023-24 ஆகிய முதல் மூன்று பட்ஜெட்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, 2023 மே மாதம் நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார்.
இதையடுத்து, 2024-25 பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிப்பெறும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் ஆகிய அறிவிப்புகள் கடந்த பட்ஜெட்டில்தான் வெளியானது.
மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ விரிவாக்கம், கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ விரிவாக்கம் என சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்தும் கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் வெளியான நிலையில், 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இந்தாண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் ஊக்கத்தொகையை அதிகப்படுத்தி அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அடுத்து இடைக்கால பட்ஜெட்டைதான் தாக்கல் செய்ய இயலும். இதுதான் தற்போதைய திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி விரிவான பட்ஜெட் என்பதால் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் பிப்.10ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் குறித்த முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.