மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யாரெல்லாம் பயனாளிகளாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Ayushman bharat health scheme | பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வயதானவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறித்து முழு தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அண்மையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்திய மத்திய அரசு 70 வயதுக்கும் மேலான அனைத்து மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என அறிவித்தது. அதன்படி, ரூ.5 லட்சம் காப்பீடு மூத்த குடி மக்களுக்கு கிடைக்கும்.
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வயதான காலத்தில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திப்பதுடன் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள பணம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் காப்பீடு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. நவீன சிகிச்சைகள் உள்ளிட்ட 1354 சிகிச்சை திட்டங்களின் கீழ் மூத்த குடிமக்கள் பயன்பெற முடியும்.
இந்தியா முழுவதும் சுமார் 17000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெறலாம்.
பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மன ஆரோக்கியம் தொடங்கி இதய அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு நவீன சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெற முடியும். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பிப்பது மிக எளிது தான். முதலில் healthid.ndhm.gov.in என்னும் மத்திய அரசின் இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் create ABHA number என்று இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.
ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு உள்ளே போக வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். உடனே அப்ளை செய்து மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறவும்.