8th Pay Commission: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நேரம் நெருங்கி வரும் இந்த நிலையில், 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்கான நம்பிக்கையும் அதிகரித்து வருகின்றது.
8th Pay Commission: பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழுக்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 பிப்ரவரி 28ஆம் தேதி அமைக்கப்பட்டது. நவம்பர் 19, 2015 அன்று குழு தனது அறிக்கையை சமர்பித்தது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. அதன் படி பார்த்தால், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். எனினும், இதற்கான உருவாக்கம் பற்றி அரசு இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த பட்ஜெட்டில் பல வித நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம். 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் (Fitment Factor) அதிகரிப்பு இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக அடிப்படை ஊதியம் (Basic Salary) சுமார் 44% உயர வாய்ப்புள்ளது.
பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் இது என்பதால், இது குறித்த எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன. 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை இப்போது அரசாங்கம் வெளியிட்டால், 2016 -இல் அது அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் மக்களின் செலவு செய்யும் திறன் அதிகமாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், இதனால் அரசாங்க கருவூலத்திற்கு அதிக சுமை கூடும்.
8வது ஊதியக் குழுவைத் தவிர, இன்னும் பல கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. இவற்றை நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) மற்றும் அவரது குழு பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த கோரிக்கைகளை இங்கே காணலாம்.
தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS ஐ நிறுத்திவிட்டு, ஒப்பீட்டளவில் அதிக பலன்கள் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் விரும்புகிறார்கள். இதற்கான கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்றின்போது முடக்கப்பட்ட 18 மாத அரியர் தொகை வழங்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொகை வந்தால் ஊழியர்களின் கணக்கில் ஒரு பெரிய தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணை நியமனங்களுக்கான (Compassionate Appointments) 5% வரம்பு நீக்கப்பட வேண்டும் என்றும் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்காலிக (Casual Workers), ஒப்பந்த (Contract) மற்றும் GDS தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும் மத்திய ஊழியர்களுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் ஊழியர் சங்கங்கள் விரும்புகின்றன.
8வது ஊதியக்குழு, டிஏ அரியர், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தாலும், இன்னும் இவை குறித்து அரசாங்கம் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வருமா என்பது அரசாங்கத்தின் நிதி நிலை மற்றும் இன்னும் பல காரணிகளை பொறுத்தது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.