பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினசரி ஏறி, இறங்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் விலையை தினசரி மாற்றி அமைப்பது குறித்து பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகள் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை சந்தித்து பேசியுள்ளனர்.
அந்தப் பேட்டியில், 'சர்வதேச அளவில் தினமும் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த செயல்முறை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று தான். தற்போது, அதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எனவே, இதனை இப்போது செயல்படுத்த முடியும்' என்று தெரிவித்தார்.
இந்திய அளவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் நாடு முழுவதும் 95% பெட்ரோல், டீசல் வழங்கி வருகின்றன. பெரும்பாலும் அனைத்து பெட்ரோல் பங்குகளும் தானியங்கி முறையில் விலை மாற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளன.
மேலும், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் வளர்ச்சியை பெற்றுள்ள சூழலில் தினசரி விலை மாற்றம் குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் வாய்ப்புகள் இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது இந்த முயற்சியை எடுத்துள்ளன.