காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் பலர், கட்சியில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்து, மாநில பிரிவுகளுக்கு அதிகாரம் வழங்கி, கட்சியை வழிநடத்தி செல்லும் ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன.
காங்கிரஸ் கட்சி ( Congress Party) மிக பலவீனமான நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
134 ஆண்டு கால பழமையான இந்த கட்சிக்கு தலைமை பிரச்சனை புதிதல்ல. ஆனால், இந்திரா முதல் இன்று வரை ஒவ்வொரு முறையும், தங்கள் ஆதிக்கத்தை நேரு குடும்பத்தினர் காப்பாற்றிக் கொண்டனர். தலைமை பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை பார்த்தால், அந்த கட்சியில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தை நன்றாக உணர்ந்து கொள்ளலாம்
1966 ஜனவரி மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய பிரதமர் லால்பக்தூர் சாஸ்த்ரி சென்ற போது, அங்கே ஒப்பந்தம் கையெழுத்தான பின் இறந்தார். அப்போது, அவருக்கு அடுத்தபடியாக இருந்த தலைவர் மொரார்ஜி தேசாயை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்திரா காந்தி பிரதமரானார். கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து, மாநிலங்கள் அவை உறுப்பினராகவும், தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்த இந்திராகாந்தியை அரியணையில் அமர்த்தினார்கள். அவர் கட்சித்தலைவராக அறிவிக்கப்பட்டு, பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், காங்கிரஸ் கட்சி, 1967 நடந்த பொது தேர்தலில் முந்தைய தேர்தலை ஒப்பிடும் போது குறைவான இடங்களில் தான் வென்றது. பல மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டில், அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நிஜலிங்கப்பா, இந்திரா காந்தியை கட்சியில் இருந்து வெளியேற்றினார்.
ஆனால், அதற்கு பின்னர் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் இந்திரா காந்திக்கு மூத்த தலைவர்கள் பலர் பேராதரவை வழங்கினர். கட்சி உடைந்தது. ஆனால், திமுக மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இப்படியாக அவர் தனது ஆதிக்கத்தினால், அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சியில் வலுக்கும் தலைமை பிரச்சனை... கட்சித் தலைமையில் மாற்றமா...!!!
1987 ஆம் ஆண்டில் மே மாதத்தில், போஃபர்ஸ் ஊழல் அம்பலமானதை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த விபி சிங் ராஜினாமா செய்தார்.கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை நேரடியாக எதிர்க்க சிங் ஜனதா தளத்தை நிறுவினார். ஷா பானோ வழக்கு தொடர்பாக அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஆரிப் முகமது கான், வி.பி.சிங்குடன் இணைந்தார். ஒடிசாவின் பிஜு பட்நாயக் மற்றும் கர்நாடகாவின் ராம்கிருஷ்ணா ஹெக்டே போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவரை பின் தொடர்ந்தனர். அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தல்லில், விபிசிங், ராஜீவ் காந்தியை தோற்கடித்து பாஜக வின் ஆதரவுடன் பிரதமர் ஆனார்.
1998 ஆம் ஆண்டும் பொது தேர்தலுக்கு முன்னதாக, 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், திடீரென, திருமதி.சோனியா காந்தி, தான் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்தார். ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின், கட்சியில் இணையுமாறு தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளை மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, சீதாராம் கேசரி கட்சித் தலைவராக இருந்தார். சோனியா காந்தி 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியில் இணைந்தார். அப்போதிலிருந்து சோனியா காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. சீதாரம் கேசரி இவர் கட்சியில் இணைந்ததை வரவேற்றாலும், தலைமை பொறுப்பை விட்டு தர தயாராக இல்லை.
இந்நிலையில் 1998 மார்ச் மாதம் 14 ஆம் தேதி, 82 வயது மூத்த தலைவராக, கட்சியின் அனுபவம் மிக்க தலைவராக விளங்கிய சீதாராம் கேசரி, தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் செயற் குழு தீர்மானம் இயற்றியது.
அந்த தீர்மானம் இயற்றப்பட்ட நாளில், காங்கிரஸ் தலைமையகமான 24 அக்பர் சாலையில் உள்ள ஒரு அறையில் வைத்து சீதாராம் கேசரி பூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது அவர் சோனியா காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பதற்கு இடையூராக இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரியின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்து, சோனியா காந்தியை அடுத்த கட்சித் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.