ஓய்வுபெற்ற IPS அதிகாரியும், பாஜக MP-யுமான ஹரிஸ் சந்திர மீனா, பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்!
வரும் டிசம்பர் 7-ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாஜக MP ஹரிஸ் சந்திர மீனா, பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் அசோக் கெலோட் மற்றும் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் முன்னிலையில் இன்று ஹரிஸ் சந்திர மீனா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
BJP MP from Rajasthan's Dausa Harish Meena has joined the Congress Party in the presence of party leaders Ashok Gehlot and Sachin Pilot, in Delhi pic.twitter.com/aiaePYmNnM
— ANI (@ANI) November 14, 2018
முன்னதாக நேற்றைய தினம் நாகூர் தொகுதி பாஜக MLA ஹபிபுர் ரஹ்மான் அஷ்ரஃபி லம்பா, பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கட்சியின் இரண்டு தலைவர்கள் ஆளும் அரசிடம் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜக-விற்கு பலத்த அடி ஏற்படுத்தும் என தெரிகிறது. வரும் டிசம்பர் 7-ஆம் நாள் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இம்மாதம் 19-ஆம் நாள் வேட்புமனு பதிவு செய்ய இறுதி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலுக்காக பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டது. முக்கிய தலைவர்கள் பலரது பெயர் இந்த பட்டியலில் விடுபட்டு இருந்தது. இதன் எதிரொலியாக பாஜக தலைவர்கள் சிலர் பாஜக-வில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தனர்.
அந்தவகையில் சுரேந்தர் கோயல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் வரும் தேர்தலில் ஜெய்தரன் தொகுதியிலில் சுயேச்சையாக போட்டியிடுவேன் எனத் தெரிவித்தார். அதேப்போல் பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் குல்தீப் தேர்தலில் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறி கடந்த திங்கள்கிழமை கட்சியை விட்டு வெளியேறினார். தொடரந்து பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவது, வரும் தேர்தலில் பாஜக-விற்கு பலத்த அடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.