காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்குமாறு கோரி, பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினார். இதற்கான மனுவை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி அளித்தார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னை வந்தார்.
ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு: அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இரண்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தில்லி திரும்ப சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
அப்போது, அவரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக் கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-2-2018 அன்று 6 வார காலத்துக்குள் ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும், கடந்த 9-4-2018 அன்று, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்போடு உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக தெரிவித்து இருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழுமையான அம்சமாக இருக்கிறது.
காவிரி தண்ணீரையே நம்பி இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா பகுதி விவசாயிகள், 1-6-2018 அன்று தொடங்கும் அடுத்த நீர்ப்பாசன பருவ காலத்தில் தங்கள் விவசாய பணிகளை தொடங்கும் வகையில் இந்த செயல்பாட்டு அமைப்பு மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
எனவே, காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை திறம்பட செயல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.