அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் வாழ் உயிரினம் ஒன்று எப்படி வந்தது என புரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைத்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 4-ஆம் நாள் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், சிறுவயது அரியவகை நீர்நாய் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டது. இந்த அரிய வகை நீர்நாயினை அறிவியலாளர்கள் 40 வருடங்களாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இம்மாதிரியான புதிய இணைப்பு கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்துதான் தென்பட்டு வருகிறது என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தங்களது கண்கானிப்பில் இருக்கும் அனைத்து நீர்நாய்களையும் பிடித்து, சிக்கியிருக்கும் புதிய வகை இணைப்பினை அறிவியலாளர்கள் அகற்றி வருகின்றனர். எனினும் இந்த வகை உயிரினங்கள் எப்படி சீல் மூக்கில் மாட்டிக்கொள்கிறது என குழம்பிவருகின்றனர்.
இருப்பினும் இச்சூழலுக்கு இரு காரணங்கள் இருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது, இந்த ஹாவாயன் மான்க் சீல்கள் உணவுக்காக, பவளப்பாறைகளையோ, மணலையோ, பாறையையோ தன் வாயையோ மூக்கையோ வைத்து முட்டும்போது இந்த பாம்பு போன்ற மீன் அதன் மூக்கில் மாட்டிருக்கலாம் (அல்லது) சீல் மூக்கில் சிக்கிக்கொண்ட இந்த உயிரினங்கள் எப்படி தப்பிப்பது என தெரியாமல் மாட்டி தவித்துக்கொண்டிருக்கலாம், என தெரிவித்துள்ளனர்.
ஆனால், உண்மையான காரணம் எதுவென்று இதுவரை அறிய இயலவில்லை. எனவே எதிர்காலத்தில் இதேப்போன்ற சூழ்நிலை அமைந்தால் நீர்நாய்களிடம் மாட்டிக் கொள்ளும் உயிரினத்தினை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.