தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: சிங்கள அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்!

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்து சிங்கள அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Last Updated : Mar 24, 2019, 11:55 AM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: சிங்கள அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்! title=

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்து சிங்கள அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அட்டகாசமும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை; முடிவு கட்டப்பட வேண்டியவை.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டு  இருந்த போது அங்கு வந்த சிங்களக் கடற்படை, இரு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கைது செய்துள்ளது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கச்சத்தீவையொட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அவ்வாறு இருக்கும் போது கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது அத்துமீறலாகும். மத்திய, மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழக மீனவர்களை கைது செய்வதை கடந்த சில வாரங்களாக இலங்கை படைகள் நிறுத்தி வைத்திருந்தன. அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு அண்மையில் நிபந்தனையின்றி விடுதலை செய்தது.

இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் மீண்டும் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 35 ஆண்டுகளில் சிங்களக் கடற்படையினரால் 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர். இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம் 1974-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்ததும், தமிழகத்தை ஆண்ட தி.மு.க. வழக்குகளுக்கு அஞ்சி அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் தான். இந்த பச்சைத் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இலங்கை அரசை தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்கவும், மீனவர்கள் நலன் காக்க தனி அமைச்சகத்தை அமைக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

 

Trending News