பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காசோலை மோசடி வழக்கில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனால் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 20, 2025, 11:01 AM IST
  • ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு.
  • காசோலை மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.
  • வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை.
பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! title=

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டுகளாக திறமையான ஆல் ரவுண்டராக பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இருந்து வருகிறார். மிகவும் திறமையான பந்துவீச்சாளராக கருதப்படும் இவர் பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை டாக்கா நீதிமன்றம், புகழ்பெற்ற வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த கைது வாரண்ட் IFIC வங்கியுடன் இணைக்கப்பட்ட காசோலை சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்பானது. இந்த வழக்கில் ஷகிப் அல் ஹசனின் நிறுவனமான அல் ஹசன் அக்ரோ ஃபார்ம் லிமிடெட் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் காசி ஷாகிர் ஹொசைன் மற்றும் இயக்குநர்கள் எம்தாதுல் ஹக் மற்றும் மலைகர் பேகம் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடுகள்.. ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம்!

ஷாகிப்பின் நிறுவனம் IFIC வங்கியின் பனானி கிளையில் பல்வேறு காலங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகின்றன. காசோலை மூலம் இந்த கடனுக்கான தொகை வங்கியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் போதுமான நிதி இல்லாததால் அவை நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக வங்கி ஷகிப் மீது குற்றசாட்டுகளை வைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஜியாதுர் ரஹ்மானால் ஷகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். 37 வயதான ஷாகிப் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2024 முதல் பங்களாதேஷை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி காசோலை மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டது. இதனை தொடர்ந்து, ஜனவரி 19 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டாக்கா நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஷகிப் அல் ஹசன். 2024 ஜூன் 24 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினார். செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டேஸ்டில் கடைசியாக விளையாடினார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இல்லை

இதுவரை 5 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 9 டி20 உலகக் கோப்பைகளில் வங்கதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் ஷகிப் அல் ஹசன். ஆனால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான 15 பேர் கொண்ட அணியில் இருந்து ஷகிப் நீக்கப்பட்டுள்ளார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருந்தார் ஷகிப். ஷகிப் கடைசியாக வங்காளதேசத்துக்காக 50 ஓவர் போட்டியில் விளையாடியது நவம்பர் 6, 2023 அன்று இலங்கைக்கு எதிராக டெல்லியில் நடந்த போட்டி தான். தற்போது, ​​சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - வருகிறது 8ஆவது ஊதியக்குழு: இப்போ ரூ.40 ஆயிரம் வாங்கினால், இனி மாதச் சம்பளம் எவ்வளவு உயரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News