Kalaignar Kaivinai Thittam | கட்டட தொழில், தச்சு வேலை செய்வோர் சொந்த தொழில் செய்ய தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் வரை கடன் கொடுக்கிறது. எப்படி பெறுவது?
கட்டுமானம், தச்சு மற்றும் கைவினைஞர் தொழிலாளர்களுக்கு கலைஞர் கைவினை திட்டத்தின் (Kalaignar Kaivinai Thittam) கீழ் தமிழக அரசு ரூ.3 லட்சம் கடன்களை வழங்குகிறது. இந்த சுயதொழில் கடன் திட்டத்திற்கு தகுதி, சலுகைகள் மற்றும் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
தமிழ்நாடு அரசு சுய தொழில் செய்வோரின் எண்ணிக்கையை உயர்த்த ஒரு சூப்பரான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை நீங்கள் கூலித் தொழில் செய்து வந்தவராக இருந்தால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் (Kalaignar Kaivinai Thittam) மூலம் நீங்கள் தொழில் முனைவோராக மாற முடியும். இந்த திட்டத்தின் கீழ் சொந்த தொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை தொழில் கடன் வழங்குகிறது தமிழ்நாடு அரசு.
யாரெல்லாம் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெறலாம்? | இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்பக் கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகுக் கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலான பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர், வண்ணம் தீட்டுவோர் பயன்பெறலாம்.
மேலும், கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோகப் பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர், மீன் வலை செய்வோர் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பயன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் தகுதிகள் என்ன? | இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் எந்த வகைத் தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். எந்த சமூகத்தினராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். சாதி தடை இல்லை.
கடன்தொகை எவ்வளவு? | ரூ. 3 இலட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
தொழில் பயிற்சி | கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சியும் கொடுக்கப்படும். அத்துடன் சுய தொழில் செய்வதற்கு தேவையான கருவிகளும் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் என்ன? | போட்டோ, ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை. சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்சொன்ன இணையதளத்திலேயே (www.msmeonline.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலக்கெடு உள்ளதா? | அனைத்து மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. தகுதியான நபர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் அல்லது மாவட்ட தொழில் மையத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நாடவும்.