ஏர் இந்தியா விமானத்தில் லண்டனில் இருந்து மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) ஒருவர் மார்ச் 11, சனிக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த நிலையில் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அவர் கட்டுக்கடங்காத முறையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்டார்.
ரத்னாகர் திவேதி என்ற அந்த என்ஆர்ஐ நபர் விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயன்றதாகவும், சக பயணி ஒருவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. அவரை பிடித்து, வலுவிழக்கச்செய்ய இரண்டு ஊசிகளைச் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்னாகர் அமெரிக்காவில் மேலாண்மை நிபுணராக பணிபுரிகிறார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
ஜாமீன் பெறக்கூடிய பிரிவில் குற்றம் சாட்டப்பட்ட அவர் பின்னர் வெளியேற அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்து அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரே வாரத்தில் இந்திய விமானம் ஒன்றின் கழிவறையில் புகைபிடித்தாக பயணி பிடிபட்ட இரண்டாவது சம்பவம் இது. மார்ச் 5 ஆம் தேதி, கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் 6E-716 இல் புகைபிடித்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
ரத்னாகர் மீது மும்பையின் சஹார் காவல் நிலையத்தால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 (உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து) மற்றும் விமானச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தன்று ரத்னாகர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானம் AI-130 இன் மூத்த கேபின் குழு உறுப்பினர் தனது புகாரில், ரத்னாகர் கழிவறைக்குச் சென்ற பிறகு, சில நிமிடங்களில் தீ எச்சரிக்கை (ஃபயர் அலார்ம்) ஒலித்ததாகவும், அந்த அலாரத்தைக் கேட்டதும், விமானி மற்றும் பிற பணியாளர்களை எச்சரித்ததாகவும் கூறினார். கழிவறைக் கதவை வெளியில் இருந்து திறந்து பார்த்தபோது, ரத்னாகர் சிகரெட் லைட்டரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அமரும் படி கூறியதற்கு அவர் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, புகாரில் கூறப்பட்டுள்ளது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ரத்னாகர் தனது இருக்கையை விட்டு எழுந்து அவசர கால வழிக்கு (எமர்ஜென்சி எக்சிட்) சென்று அதை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. குழுவினரும் மற்ற பயணிகளும் அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்துயதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் அவர் தனது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விமானத்தில் பயணித்த மருத்துவர் ரத்னாகரைப் பரிசோதித்தபோது, அவர் சில மருந்துகளை உட்கொண்டிருப்பதாகக் கூறியதாக ஒரு குழு உறுப்பினர் தெரிவித்தார். இருப்பினும், அவரது பையை ஆய்வு செய்தபோது, மருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு இ-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர் ரத்னாகருக்கு இரண்டு ஊசிகளை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், அவரது கைகளையும் கால்களையும் அவரது இருக்கையில் கட்ட வேண்டியிருந்தது என்றும் குழு உறுப்பினர் கூறினார்.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’ வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ