போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 129 பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை தடுப்பதற்கு போலிப் பல்கலைக்கழகம் ஒன்றை அமெரிக்க போலீசார் தொடங்கியது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதற்காக அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு F1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 130 பேரில் 129 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனிடயே, கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் 24 மணி நேரமும் செயல்படும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதான மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள தனிப் பிரிவையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் cons3.washington@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.