லக்னோ : உ.பி. முதல்வர் அகிலேஷ் நடத்தும் தேர்தல் பிரசார யாத்திரையில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுடன் மோதல் .
உ.பி. சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் மிகப் பெரிய பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உ.பி. முதல்வர் அகிலேசுக்கும், அவரது சித்தப்பா சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம் சிங்கும் தனது சகோதரர் சிவபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இதனால் கட்சியே உடையும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அகிலேஷ் தனது தேர்தல் பிரசார யாத்திரையை இன்று துவக்கினார். இந்த விழா லக்னோவில் நடந்தது. இதில் அகிலேஷ், முலாயம் சிங், சிவபால் ஆகியோர் கலந்து கொண்டனர். யாத்திரையை சிவபால் கொடியசைத்து துவக்கி வைத்தார். அகிலேசின் இந்த யாத்திரை வெற்றி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்குள் எந்த பிளவும் கிடையாது. தொண்டர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி, வெற்றிக்காக பாடுபடுவார்கள் என சிவபால் பேசினார். 2017 ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
கட்சி ஒற்றுமை குறித்து தலைவர்கள் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது பிரசார யாத்திரையில் கலந்து கொள்வதற்காக வந்த சமாஜ்வாதி தொண்டர்களில் அகிலேஷ் ஆதரவாளர்களுக்கும், சிவபாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்கள் ஒருவரின் மீது ஒருவர் நாற்காலிகளையும், கட்சி கொடி கம்புகளையும் வீசி தாக்கினர். தலைவர்கள் முன்னிலையில் தொண்டர்கள் இடையே நடந்த அடிதடி மோதல் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.