நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கை வைத்த அடுத்த சில நிமிடங்களில், அதற்கு ஓகே சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுவும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்றும் தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் கோவைக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கன்பார்ம்
அமைச்சர் டிஆர்பி ராஜா இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்தார். அந்த பதிவில், கடந்த சில நாட்களாக, கோயம்புத்தூர் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்தபோது, விளையாட்டுகளில் ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் கோவையின் ஆர்வம் ஈடு இணையற்றது. கோயம்புத்தூர் 3 TNPL அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாகும். மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுமைக்கும் Sports Infra-வில் ஒரு பெரிய ஊக்கம் தேவை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறார். கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறமைகள் மற்றும் தமிழ்நாட்டில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு கிரிக்கெட் ஸ்டேடியத்தை உருவாக்க வேண்டும் என கேட்டார்.
அந்த சர்வதேச பல்நோக்கு கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா கேட்டுக் கொண்டார். உலக தரத்திலும், காலநிலையை கருத்தில் கொண்டும் இந்த ஸ்டேடியம் இருக்க வேண்டும். இது ஒரு net zero ஸ்டேடியமாக இருக்கலாம். இது நமது உள்ளூர் கிரிக்கெட் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதில் Small Turf Grounds-ஐ சேர்ப்போம் என்றும் தெரிவித்திருந்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியாக இதை சேர்க்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் என எமது அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளதைப் போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்னையின் சின்னமாக இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தைப் போல் கோவையில் அமையவிருக்கும் கிரிக்கெட் மைதானமும் தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்க உறுதிபூண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.