'பெஞ்சல் புயல் கரையை இன்னும் கடக்கவில்லை...' வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Cyclonic Storm Fengal: பெஞ்சல் புயல் கரையை இன்னும் முழுமையாக கடக்கவில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். இது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுக்கு முற்றிலும் வேறாக உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 1, 2024, 12:11 PM IST
  • புயல் நேற்றிரவு 11.30 மணிக்கு கரையை கடந்ததாக அறிவிப்பு.
  • இருப்பினும் இன்று காலை வரையும் புயல் கரையை கடக்கவில்லை என்றார் பிரதீப் ஜான்
  • இன்று மாலைக்குள் புயல் கரையை கடக்கலாம் - பிரதீப் ஜான்
'பெஞ்சல் புயல் கரையை இன்னும் கடக்கவில்லை...' வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன? title=

Cyclonic Storm Fengal Latest News Updates: பெஞ்சல்‌ புயல்‌ நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை தொடங்கியதாகவும், இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்ததாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், புயல் கரையை கடந்தபோது காற்று 90 கி.மீ., வேகத்தில் வீசியதாகவும் தெரிவிகப்பட்டது. 

புயல் கரையை கடந்தபோது புதுச்சேரி, மரக்காணம்‌, மாமல்லபுரம்‌ உள்ளிட்ட பகுதிகளில்‌ பலத்த சூறைக்காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயலின் மையப் பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தாலும், விழுப்புரம் நிலப்பகுதியில் நிலைக்கொண்டிருப்பதாகவும், புயல் நகரவே இல்லை எனவும் வானிலை மையம் தெரிவித்தது. இதனால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்தது. 

விழுப்புரம், புதுச்சேரியில் அதி கனமழை

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. மேலும், புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதீத கனமழை பெய்திருப்பதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 49 செ.மீ., மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இடையே பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், தற்போது புதுச்சேரி அருகே நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்" என குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க | வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!! கடல் போல் தேங்கிய மழைநீர்..

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் (காலை 10 மணி நிலவரம்) வெளியிட்ட அறிக்கையின்படி, "அடுத்த 3 மணிநேரத்திற்கு (மதியம் 1 மணிவரை) திருவண்ணாமலை, காரைக்கால், தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், ஈரோடு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்காத பெஞ்சல் - பிரதீப் ஜான்

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X தளத்தில் இன்று காலை 8.23 மணிக்கு போட்ட பதிவில்,"பெஞ்சல் புயல் இன்னும் திறந்த கடலில்தான் உள்ளது. கரையைக் கடக்கவில்லை (செயற்கைக்கோள் வரைபடங்கள் உட்பட கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கவும்). மேலும் இன்று மதியம் முதல் மாலைகுள் பெஞ்சல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெஞ்சல் புயலால் இன்றும் கடலூர், புதுச்சேரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பொழியும். இன்று மாலை வரை புயல் அங்கேயே நிலைகொண்டிருக்கும் இருக்கும். சென்னையில் இன்று மழை அவ்வப்போது வரும், போகும். சில நேரங்களில் சிறிது தீவிரமாகக் கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார்.

கருத்து வேறுபாடு

சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் கரையை நேற்றிரவு 11.30 மணிக்கே முழுமையாக கடந்துவிட்டதாக அறிவித்த நிலயைில், பிரதீப் ஜான் அது இன்னும் கடக்கவில்லை என கூறியது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுகுறித்தும் தனது பதிவில் பின்குறிப்பாக குறிப்பிட்டுள்ளார். "புயல் கரையை கடப்பது குறித்து அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையத்தில் இருந்து எனது கருத்து வேறுபடுவதால், உத்தியோகபூர்வ பணிகளுக்காக அதிகாரப்பூர்வ ஆய்வு மையத்தின் ஆணைகளையே பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள.

புயல் கரையை கடக்கவில்லை என்பதற்கான ராடார் மற்றும் செயற்கைக்கோள் சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளன, எனவே கனமழை மற்றும் பலத்த காற்று இருக்கும் இந்த இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. படங்களில் உள்ள நேரம் GMT-இல் இருப்பதால், அதில் இந்திய நேரப்படி 5.30 மணிநேரத்தைச் சேர்க்கவும்" என்றார். 

தமிழ்நாடு  வானிலை நிலவரம்

மேலும் அவர் தற்போது வெளியிட்ட பதிவில் (காலை 11.14 மணிக்கு),"பெஞ்சல் புயல் ஒருவழியாக கரைப்பகுதிக்கு நகர்கிறது மற்றும் மையத்தைச் சுற்றியுள்ள அடர்த்தியான மேகக்கூட்டங்கள் விழுப்புரத்திற்கு நகர்வதை நம்மால் காணமுடிகிறது. புயலின் தென்மேற்கு பகுதி மட்டுமே இப்போது மேகமூட்டத்துடன் உள்ளது, இது புயல் மேற்குப் பாதையில் சென்றவுடன் மேற்குப் பக்கமாக மாறும்.

இது மேற்கு - வடமேற்கு பாதையில் செல்லும். அதாவது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் பெங்களூரூ, மைசூர் அனைத்திலும் மழை பெய்யும். கோயம்புத்தூரில் சில இடங்களில் மழை இருக்கும். நீலகிரியிலும் ஓரளவு மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Live: கரையை கடந்த பெஞ்சல் புயல்... எங்கெல்லாம் அடுத்து மழைக்கு வாய்ப்பு? - இன்றைய முக்கிய செய்திகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News