டெல்லி அணி மோசமான தொடக்கம்
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வழக்கம்போல் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் அந்த அணியில் சரியான வகையில் பிளேயர் காம்பினேஷன் இல்லாததே ஆகும். இத்தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினர்.
ஹாரி ப்ரூக் திடீரென விலகல்
டெல்லி அணியில் இருந்தும் ஹாரி ப்ரூக் விலகினார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் விளக்கம் அளித்தார். ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு பின்னடைவு
இதனால் ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி அவரை கழட்டிவிட்டது. இந்நிலையில் தான் வீரர்கள் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக அவர் டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் இடத்திலோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரிலிருந்தே ஹாரி ப்ரூக் விலகியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரர்
இந்நிலையில் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவரது அடிப்படி தொகையான ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சில் பெரும் பின்னடைவை சந்திதுத்து வருவதால் வேகப்பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றியையும் பெற்றிருக்கிறது டெல்லி.