திருப்பதி தேவஸ்தானத்திடம் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளதாக தலைமை செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் 1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் 1381 கிலோ தங்கக்கட்டிகளை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட விஷயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆந்திர மாநில தலைமை செயலர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது. மொத்தம் 9,259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது.
இதன்மூலம், தேவஸ்தானத்திடம் இப்போதைய மார்க்கெட் மதிப்பின்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.