ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் ஒரு கவுரவமான வாழ்க்கையை வாழ நாம் திட்டமிட்டு சேமிக்கும் நிதி தான் ஓய்வூதிய நிதியம். நீங்கள் எப்போது ஓய்வு பெற விரும்புகிறீர்கள், உங்கள் ஓய்வு கால வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் ஓய்வூதிய நிதி தொகையைக் கணக்கிட்டு சேமிக்க தொடங்க வேண்டும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு முதலீடு செய்தால் அனைத்தும் சாத்தியமே. லட்சங்களை கோடிகளாக்குவது மிக எளிது.
உங்களுக்கு 35 வயதான நிலையில், 60 வயதில் ஓய்வு பெற திட்டமிட்டிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு முதலீடு செய்ய 25 ஆண்டுகள் உள்ளன. ஓய்வூதியத் தொகைக்கான திட்டமிடலில், ஓய்வூதிய வயதில் உங்கள் மாதாந்திர/ஆண்டு செலவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதுடன், பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு கணக்கிடலாம்.
முதலீட்டிற்கான தேர்வுகள்
ஓய்வூதிய நிதியை உருவாக்க நிலையான வட்டி மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்யலாம். நிலையான வருமான விருப்பங்கள் உங்கள் நிதியத்திற்கு நிலைத்தன்மையை வழங்க முடியும் என்றாலும், சந்தையுடன் இணைக்கப்பட்ட விருப்பங்கள் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை வழங்கும்.
வரிக்குப் பிந்தைய முதலீட்டு வருமானம்
வரி விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, சமீபத்திய விதிகள் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருப்பதும், வருமான வரியை கருத்தில் கொண்டு உங்கள் உத்தியைத் தொடர்ந்து திருத்திக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
இளமையிலேயே முதலீட்டை தொடங்குவதன் நன்மைகள்
ஓய்வூதிய நிதியை நீங்கள் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் அடைவதே இறுதி இலக்காக இருக்க வேண்டும். இளமையிலேயே முதலீட்டை தொடங்குபவர் தங்கள், நீண்ட முதலீட்டை கூட்டு வட்டியின் பலனுடன் எளிதாக பணத்தை பெருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். இளமையிலேயே தொடங்குபவர் தாமதமாகத் தொடங்குபவரை விட குறைந்த முதலீட்டுடன் ஓய்வூதிய நிதி இலக்கை மிக எளிதாக அடைய முடியும். ஏனென்றால், நீண்ட கால முதலீட்டில் கூட்டு வட்டியின் பலனை அதிகபட்சமாக பெறலாம்.
இளமையிலேயே முதலீட்டை தொடங்குவதால் கிடைக்கும் நிதி நன்மைகளை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
A மற்றும் B என்ற இருவரை எடுத்துக்கொள்வோம்.
A தனது ஓய்வூதிய நிதிக்கான முதலீட்டு பயணத்தை 25 வயதில் தொடங்குகிறார்; B 35 வயதில் தொடங்குகிறார்.
இருவரும் 60 வயதிற்குள் ரூ.5 கோடி என்ற அளவிலான ஓய்வூதிய நிதியை உருவாக்க விரும்புகிறார்கள்.
இருவரும் மாதாந்திர SIP என்னும் மியூசுவல் ஃபண்ட் முதலீட்டை முறையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். பரஸ்பர நிதிய முதலீட்டில் சாரசரியாக 12 சதவீத வருடாந்திர வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நிதி வல்லுநர்கள். இதில் கூட்டு வட்டியின் பலனுடன் முதலீட்டில் கிடைக்கும் ரிட்டன் எவ்வளவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
A 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, ரூ.5 கோடி ஓய்வூதிய நிதி இலக்கை அடைய நினைக்கிறார். இதற்கு அவரது மாத முதலீடு ரூ.7,700 SIP என்ற அளவிலும், மொத்த தொகை ரூ.32,34,000 என்ற அளவிலும் இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
B 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, ரூ.5 கோடி ஓய்வூதிய நிதி இலக்கை அடைய நினைக்கிறார். இதற்கு அவர் செய்ய வேண்டிய முதலீடு மாதம் ரூ.26,350 SIP என்ற அளவிலும், , மொத்த தொகை ரூ.79,05,000 என்ற அளவிலும் இருக்க வேண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் மொத்த முதலீட்டில் ரூ.1.5 கோடி நிதியை எவ்வாறு உருவாக்குவது?
ஒருவர் ரூ.5 லட்சம் மொத்த தொகையை டெபாசிட் செய்து, அவர்களின் முதலீட்டில் 12 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், அவர்கள் 30 ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும். இந்த முதலீட்டை 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் பிரித்துப் பார்ப்போம்.
10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் ஒரு முறை முதலீட்டிலிருந்து சேரும் தொகை
10 ஆண்டுகளில், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.10,52,924 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.15,52,924 ஆகவும் இருக்கும்.
20 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் ஒரு முறை முதலீட்டிலிருந்து சேரும் தொகை
20 ஆண்டுகளில், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.43,23,147 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.48,23,147 ஆகவும் இருக்கும்.
30 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் ஒரு முறை முதலீட்டிலிருந்து சேரும் தொகை
30 ஆண்டுகளில், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,44,79,961 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,49,79,961 ஆகவும் இருக்கும்.
ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சேரும் தொகை வேகமாக வளர்ந்து வருவதை நீங்கள் காணலாம். SIP முதலீட்டின் கூட்டு வட்டி வருமானத்தினால் கிடைக்கும் வளர்ச்சியே இதற்குக் காரணம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
மேலும் படிக்க | உங்கள் குழந்தை பெயரில் SIP முதலீடு தொடங்குவது எப்படி... சில முக்கிய விபரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ